நெல்லை: பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த அதிரடி உத்தரவை அடுத்து, நெல்லை மாவட்டம் அருகே கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகளை அகற்றும் பணி இரண்டாவது நாளாக திங்கள்கிழமை (டிசம்பர் 23) நீடித்தது.
நெல்லை மாவட்டம் அருகே உள்ள கோடகநல்லூர், சுற்றுவட்டாரப் பகுதிகளில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் மருத்துவக்கழிவுகள் உரிய அனுமதியின்றி கொட்டப்படுவதாக அண்மையில் பல்வேறு தரப்பினரும் புகார்கள் எழுப்பினர்.
இதுதொடர்பான மனுவை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தமிழக எல்லையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளைக் கேரள அரசே அகற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
இதேபோல், கேரள அரசு மருத்துவக் கழிவுகளைக் கொட்ட அனுமதித்தது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது.
இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை முதல் கோடகநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டப்பட்ட கழிவுகளை அள்ளி லாரிகளில் எடுத்துச் செல்லும் பணிகளைக் கேரள அரசு தொடங்கியது.
திருவனந்தபுரம் உதவி ஆட்சியர் சாஷி, சுகாதாரத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இது தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தனர். ஆக மொத்தம், 30 லாரிகளில் மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டு கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டன.
பழவூர், கொண்டாநகரம், இலந்தைகுளம், வேளார்குளம், கோடகநல்லூர், பாரதியார் நகர், திடியூர் ஆகிய பகுதிகளில் இருந்து திங்கள்கிழமை மாலை வரை தொடர்ந்து மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டன.
எதிர்காலத்தில் இதுபோன்று மீண்டும் நிகழாமல் இருக்க கோவை உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் புதிய சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரமடைகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, மருத்துவக் கழிவுகளைக் கொட்டியது தொடர்பாக ஐந்து பேரை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் இருவர் தேடப்பட்டு வருகின்றனர்.

