நீலகிரி: தேனீக்கள் கொட்டியதில் கேரளாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துவிட்டார்.
இந்தச் சம்பவம் நீலகிரியில் புதன்கிழமை நிகழ்ந்தது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த சினான், ஆசிப் (23), ஜாபீர் (24) ஆகிய மூவரும் அண்மையில் நீலகிரிக்குச் சுற்றுலா சென்றிருந்தனர்.
அங்கு, கூடலூர் அருகே உள்ள ஊசிமலை காட்சிமுனைக்குச் சென்ற மூவரும் பின்னர் தடை செய்யப்பட்ட பாறைப் பகுதிக்குச் சென்றுள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக மூவரும் தேனீக்களிடம் சிக்க நேர்ந்தது. ஆசிப், சினான் ஆகிய இருவரும் எப்படியோ சுதாரித்து அங்கிருந்து ஓட்டம்பிடித்தனர்.
ஆனால், ஜாபீர் வசமாக சிக்கிக்கொண்டார். ஆயிரக்கணக்கான தேனீக்கள் அவரைச் சுற்றிவளைத்துக் கொட்டியதில் அவர் நிலைகுலைந்து போனார்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்களும் வனத்துறையினரும் நீண்ட நேரம் போராடி அவரை மீட்டனர்.
பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்தச் சம்பவம் குறித்து நீலகிரி காவல்துறை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.