சென்னை: தமிழக பாஜக துணைத் தலைவர்களாக நடிகை குஷ்பு உள்ளிட்ட 14 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் ஒப்புதலுடன் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“மாநிலத் துணைத் தலைவர்களாக வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், கரு. நாகராஜன், சசிகலா புஷ்பா, குஷ்பு சுந்தர் உள்ளிட்ட 14 பேர் நியமிக்கப்படுகிறார்கள். மாநில அமைப்பு பொதுச் செயலாளராக கேசவ விநாயகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
“மாநிலப் பொதுச் செயலாளர்களாக பாலகணபதி, ராம ஸ்ரீநிவாசன், எம். முருகானந்தம் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநிலச் செயலாளர்களாக முன்னாள் சென்னை துணை மேயர் கராத்தே தியாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, கட்சி மேலிடம் தமக்கு அளித்துள்ள புதிய பொறுப்பு மிகுந்த உற்சாகம் அளிப்பதாக குஷ்பு கூறியுள்ளார்.
மேலும், பாஜக-அதிமுக கூட்டணியைப் பலப்படுத்த நடிகர் விஜய் இக்கூட்டணியில் இணைய வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
“விஜய்யை என் சகோதரராகக் கருதுகிறேன். திமுகவை ஆட்சியில் இருந்து விலக்க வேண்டும் என்பதே அவரது இலக்கு. அதே நோக்கத்துடன் செயல்படும் பாஜகவுடன் அவர் இணைந்து செயல்படுவதுதான் நல்லது,” என்று குஷ்பு மேலும் கூறியுள்ளார்.