மதுரை: சிறுநீரக முறைகேடு வழக்கு தொடர்பான விசாரணையின் தற்போதைய நிலை குறித்து இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் ஏழைத்தொழிலாளிகளை ஏமாற்றி, சிலர் அவர்களின் சிறுநீரகங்களைக் குறைந்த விலைக்கு விலை பேசி தானம் அளிக்க வைத்துள்ளனர்.
அத்தொழிலாளர்கள் தாமாக முன்வந்து தங்கள் சிறுநீரகத்தைத் தானம் அளித்திருப்பதாகவும் இடைத்தரகர்கள் சித்திரித்துள்ளனர்.
இதையடுத்து, பரமக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் சக்தீஸ்வரன் என்பவர், பள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள விசைத்தறி, சாய ஆலைகளைச் சேர்ந்த பல ஏழைத் தொழிலாளர்கள் சிறுநீரகத் தானம் செய்பவர்களாக சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். எனினும், இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் தலைமையில் ஐபிஎஸ் அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்றை அமைத்து சிறுநீரக மோசடி குறித்து விசாரிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், சத்தீஸ்வரன் மனு மீதான விசாரணை கடந்த புதன்கிழமை (அக்டோபர் 29) நடைபெற்றது. அப்போது வழக்கு விசாரணையின் நிலை குறித்து இடைக்கால அறிக்கையை விசாரணைக் குழு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கைத் தள்ளிவைத்தனர்.


