சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சிபிசிஐடி காவல்துறையினர் திடீரென ஓர் அழைப்பாணை அனுப்பி உள்ளனர்.
கோடநாடு கொலை, கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அந்த அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டம், பங்களா ஆகியன உள்ளன.
வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரிடம் இந்த நிலம் மிரட்டி அபகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் 2017ஆம் ஆண்டு கோடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.
இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜ் உள்ளிட்டோர் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
அதே நேரத்தில் அடுத்த சில நாட்களிலேயே கனகராஜ் திடீரென சாலை விபத்தில் இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, கோடநாடு பங்களா சிசிடிவி கண்காணிப்புக் கருவிகளை இயக்கிய தினேஷும் தமது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை 250க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
தற்போது இந்த வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில் சுதாகரனுக்கும் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இது இந்த வழக்கில் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.