கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானார்

கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானார்

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்
படம்: பாலிமர்நியூஸ்

19 Nov 2026 - 6:52 pm

2 mins read

சென்னை: சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 70 நாள்களுக்கும் மேலாகத் தீவிர சிகிச்சை பெற்றுவந்த சென்னை கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு, 75, காலமானார்.

வியாழக்கிழமை (நவம்பர் 19) பிற்பகல் 2.24 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை வெளியிட்ட அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவர் அமைந்தகரையில் உள்ள ‘எம்ஜிஎம் ஹெல்த்கேர்’ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பல்வேறு கட்ட மருத்துவ சிகிச்சைகள், பலதுறை மருத்துவக் குழுவினர் அளித்த சிகிச்சைகளையும் தாண்டி, அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை பிற்பகலில் மாரடைப்பால் அவர் காலமானதாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. 

தமிழக முதல்வர் விஜய் செப்டம்பர் 23ஆம் தேதி மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.

பல நாள்களாகவே வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்த எந்தத் தகவலும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. அதனால், அவரது உடல்நிலை குறித்த தகவல்களை வெளியிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது

முன்னதாக, வடசென்னை மாவட்ட திமுக செயலாளராக இருந்த வி.எஸ்.பாபு, 2006ஆம் ஆண்டு புரசைவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதால் திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் சேகர்பாபு வடசென்னையில் ஆதிக்கம் செலுத்தினார். இதனால் அதிருப்தியடைந்த வி.எஸ்.பாபு, திமுகவிலிருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்தார். அங்கு அவருக்கு பெரிய வாய்ப்பு கிடைக்காத நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் தவெகவில் இணைந்தார்.

இவ்வாண்டு ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிபெற்றதன் மூலம் அவர் தமிழகம் முழுவதும் பிரபலமடைந்தார்.

குறிப்புச் சொற்கள்