கும்பகோணம்: டெல்டா மாவட்டங்களின் தகவல் தொழில்நுட்ப மையமாகக் கும்பகோணம் மாறுகிறது. தமிழ்நாடு அரசு மாவட்டந்தோறும் தகவல்தொழில்நுட்பத் துறை சார்ந்த வேலைகளை உருவாக்கும் வகையில் தொழில்நுட்ப மையங்களை அமைத்து வருகிறது.
இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான சோஹோ நிறுவனம் கும்பகோணத்தில் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப மையத்தை அமைக்கத் திட்டமிட்டு இருக்கிறது.
இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சேவையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ஸ்ரீதர் வேம்புக்கு சொந்தமான சோஹோ நிறுவனம் வளர்ச்சி அடைந்து வருகிறது. அண்மையில் மத்திய அமைச்சர்கள் பலரும் ஜி மெயிலுக்கு மாற்றாக சோஹோ மெயிலை பயன்படுத்தத் தொடங்கினர். வாட்ஸ் அப் செயலிக்கு மாற்றாகச் சோஹோவின் அரட்டை செயலியின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது.
சோஹோ நிறுவனம் சிறு நகரங்களில் அலுவலகங்களை அமைத்து அங்கிருக்கும் திறன்மிகு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதில் தீவிரம் காட்டுகிறது.
அந்த வகையில் கும்பகோணத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப மையத்தை அமைக்க உள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஏறக்குறைய 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சோஹோ நிறுவனம் ஏற்கெனவே தங்களுடைய சோஹோ ஸ்கூல்ஸ் ஆப் லேர்னிங் என்ற பயிற்சி மையத்தைக் கும்பகோணத்தில் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

