கும்பகோணம்: பேராசிரியர்களுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி) கால வரம்பின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணத்தில் இயங்கிவரும் அரசினர் கலைக் கல்லூரியில் 4,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
அங்கு பணியாற்றும் பேராசிரியர்களில் சிலர் மாணவர்களைச் சாதி அடிப்படையில் விமர்சிப்பதாகப் புகார் எழுந்தது.
அண்மையில், தமிழ்த் துறை உதவிப் பேராசிரியை ஒருவர், முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பின்போது, பண்டைக் காலத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளைச் சுட்டி, பெண்களைச் சாதி அடிப்படையில் தரக்குறைவாகப் பேசியதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பிட்ட சில மாணவர்களைக் குறிவைத்து அவர் விமர்சித்ததாகக் குற்றம் சுமத்தி, அவர்மீது நடவடிக்கை எடுக்க மாணவர்களில் ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், மாணவர்களின் கோரிக்கைக்கு கல்லூரி நிர்வாகம் இணங்கவில்லை.
இதனையடுத்து, மாணவர்கள் வகுப்புகளுக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டம் ஆறாம் நாளை எட்டியதை அடுத்து, கால வரையறையின்றி கல்லூரி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“கல்லூரியில் இயல்பிற்கு மாறான சூழல் நிலவுவதால், கல்லூரி ஆட்சிமன்றக் குழுவின் தீர்மானத்தின்படி, மறுஉத்தரவு வரும் வரை கல்லூரி மூடப்படுகிறது,” என்று அக்கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தெரிவிக்கிறது.
மேலும், பேராசிரியர்கள்மீது மாணவர்கள் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரித்து வருகிறோம் என்றும் தவறிழைத்தோர்மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

