தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் சேகரிக்கும் பணி தொடக்கம்: போராட்டக் குழு கடும் கண்டனம்

2 mins read
a69ad198-541c-4c5d-bb37-bffff3b0b0f0
சட்டப் போராட்டத்துக்கான முன்னெடுப்பு சில நாட்களில் தொடங்கும்,” என போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர்.. - படம்: ஊடகம்

காஞ்சிபுரம்: கடும் எதிர்ப்பையும் மீறி பரந்தூர் பசுமை விமான நிலையத்துக்கு நிலம் சேகரிக்கும் பணி தொடங்கி உள்ளது. இதற்கு போராட்டக்குழுவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆனால், முதற்கட்டமாக ஐந்து கிராமங்களைச் சேர்ந்த 19 பேரின் 17.52 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர்களுக்கு ரூ.9.22 கோடி வழங்கப்பட்டதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை விமான நிலையத்தில் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 19 கிராமங்களில் புதிய பசுமைவெளி விமான நிலையம் அமைக்க 2023 அக்டோபர் 31ஆம் தேதி தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியது.

இதற்கு தொடக்கத்திலேயே அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனினும், கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு அதிகரிக்கப்பட்டு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று நில உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்ததாகவும் அதன்படி நில மதிப்பு மறு நிர்ணயம் செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டு, ஜூன் 25ஆம் தேதி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

இதனால் கொந்தளித்துப்போன கிராம மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதிமுக, நாதக, தவெக உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் கிராம மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளன.

இந்நிலையில், தொடர்ந்து, பரந்தூர், பொடவூர், நெல்வாய், வளத்தூர், அக்கம்மாபுரம் கிராமங்களைச் சேர்ந்த 19 பேரிடம் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, அவர்கள் 17.52 ஏக்கர் நிலத்தை வழங்க சம்மதம் தெரிவித்தனர்.

மேலும், ரூ.9.22 கோடி மதிப்பிலான நிலத்தை, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்துக்கு பதிவு செய்து கொடுத்தனர். நில உரிமைதாரர்களுக்கு இழப்பீட்டுத் தொகை உடனடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நடவடிக்கைக்கு பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்ட எதிர்ப்பு போராட்டக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

பரந்தூர் புதிய விமானநிலைய திட்டத்தை கைவிடுமாறு மூன்று ஆண்டுகளாக போராடி வரும் நிலையில், மக்களிடம் ஆலோசிக்காமலும், முறையான ஆய்வுகள் நடத்தாமலும், வேளாண் நிலங்களை கையகப்படுத்த அரசாணை வெளியிடுவது, பண மதிப்பீட்டுக்கான அரசாணை வெளியிடுவது போன்ற தவறான முன்னெடுப்புகளை அரசு மேற்கொண்டு வருவதாக அக்குழு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

விவசாயிகள் நிலங்களை கொடுக்க முன்வந்துவிட்டதாக ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க தமிழக அரசு முயற்சி செய்வதை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.

“தமிழக அரசின் இந்த ஜனநாயக படுகொலை செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். உடனடியாக, அனைத்து அரசியல் கட்சிகளின் துணையுடன் பெரிய அளவில் போராட்டம் முன்னெடுக்கப்படும். மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். சட்டப் போராட்டத்துக்கான முன்னெடுப்பு சில நாட்களில் தொடங்கும்,” என போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்