தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூச்சுத் திணற வைக்கும் மொழி சர்ச்சை

4 mins read
e2ae688b-1f6e-440d-a486-19a0c15438b7
ராபர்ட் கால்டுவெல். - படம்: ஊடகம்
multi-img1 of 2

“தமிழில் இருந்துதான் கன்னட மொழி உருவானது!”

- கமல் சொன்ன இந்த கருத்து கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சர்ச்சைக்குள் போவதற்கு முன்னால், கமல்ஹாசனின் கூற்றுக்கு ஆதாரம் உள்ளதா என்பதைப் பார்த்துவிடுவோம்.

‘கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி’ - எனச் சொல்வதுண்டு.

தமிழகத்தின் கன்னியாகுமரி கடலுக்குள் லெமூரியா கண்டம் மூழ்கிக் கிடப்பதாக விஞ்ஞானிகள் ஏற்கெனவே கண்டுள்ளனர்.

லெமூரியா கண்டத்தில்தான் மனிதன் முதலில் தோன்றினான் என்றும் அவன் பேசிய மொழி தமிழ் என்றும் சொல்லப்படுகிறது.

தமிழ் மூத்த மொழி என்பதற்கு மதுரையை அடுத்த கீழடியில் கிடைத்திருக்கும் அகழாய்வு பொருள்களே இன்றைய சாட்சி.

‘A comparative grammer of the Dravidian of South Indian family of Languages’

- இந்த நூல் ‘திராவிட ஒப்பிலக்கணம்’ என தமிழில் அழைக்கப்படுகிறது.

இந்நூலை எழுதியவர் கிறிஸ்துவ சமய பரப்புரையாளரான அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ராபர்ட் கால்டுவெல்.

தமிழகம் வந்த கால்டுவெல் உள்ளூர் மொழியான தமிழிலேயே சமய பரப்புரை செய்ய விரும்பி, தமிழைக் கற்றார். அப்படி கற்கும் போதுதான் தமிழ் குறித்த அவர் எழுதிய ‘திராவிட ஒப்பிலக்கணம்’ நூல் 1856ஆம் ஆண்டில் முதன்முதலில் வெளியிடப்பட்டது.

அந்நூலில்...

“திராவிட மொழிகளின் மிகப் பழைய அமைப்புமுறை, அவற்றின் தனிச்சிறப்பு ஆகியவை குறித்து முழு விளக்கங்களையும் பெறுவதற்கான ஆராய்ச்சிக்குத் துணைபுரியும் நம்பிக்கையில் அவ்வினத்தின் பல்வேறு மொழிகளின் இலக்கண விதிகளையும் அமைப்பு முறைகளையும் ஆராய்வதும் ஒன்றோடு ஒன்று ஒப்புநோக்குவது இந்நூலின் நோக்கம்..” என கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார்.

“திராவிட மொழிகளுக்குள்ளே மிகப் பழைய காலத்திலேயே திருந்திய நிலை பெற்றதும், நாகரிகம் உடையதாகவும் திராவிட மொழிகளின் பிரதிநிதியாக விளங்குவதுமான தமிழ் மொழியின் அமைப்புமுறை பற்றிய பல்வேறு விளக்கங்களைப் பெருமளவில் தருவதே சிறப்பு,” என கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார்.

‘தமிழ் உள்ளிட்ட ஏனைய திராவிட மொழிகள் உட்பட அனைத்து இந்திய மொழிகளுக்கும் தாய் சமசுகிருதம்’ என அனைவரும் நம்பியிருந்த காலகட்டத்தில் அதனை மறுத்து, திராவிட மொழிச் சிறப்பை ஆதாரங்களுடன் நிறுவி, தமிழ் தனித்த மொழி, இதிலிருந்து சமசுகிருதமும் பிற இந்திய மொழிகளும் சொற்களைக் கடன் வாங்கியுள்ளன என்பதை இந்நூல் நிரூபித்துள்ளது.

தமிழில் இருந்துதான் மலையாளம், கன்னடம், துளு, தெலுங்கு ஆகிய மொழிகள் உருவானதாக மொழியியல் அறிஞர்களால் சொல்லப்பட்டு வருகிறது.

இனி... இன்றைய விவகாரத்துக்கு வருவோம்.

சென்னையில் நடைபெற்ற ‘தக் லஃப்’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய கமல், “உயிரின் உறவே தமிழே! எனது வாழ்க்கையும் குடும்பமும் தமிழ் மொழிதான். நடிகர் சிவ்ராஜ்குமார் இங்கே வந்துள்ளார். அவரது மொழியான கன்னடம், தமிழ் மொழியிலிருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒருவரே” என்றார்.

கமலின் இந்தப் பேச்சுக்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு. கமலின் கருத்து கன்னட மக்களை அவமதிக்கும் செயல். கமல் தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால், ‘தக் லைஃப்’ படம் கர்நாடகாவில் வெளியாகாது என கன்னட அமைப்புகளும் கர்நாடக காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கேரளாவில் திருவனந்தபுரத்தில் ‘தக் லைஃப்’ படத்தைப் பிரபலப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.

“கன்னட மொழி குறித்து பேசியதற்காக நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். நான் சொன்ன கருத்தை எனது நிலையில் இருந்து பார்த்தால் சரியாக இருக்கும். உங்கள் பக்கமிருந்து பார்த்தால் தவறாக இருக்கும்.

“நான் அன்பினால் சொன்ன கருத்து அது. அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது.

“தமிழகத்தில்தான் ‘மேனன்’ முதல்வராக இருந்தார். ரெட்டியும் கன்னட அய்யங்காரும் தமிழகத்தில் முதல்வராக இருந்தனர். நான் உட்பட எந்த அரசியல்வாதியும் மொழி குறித்துப் பேச தகுதி பெறவில்லை.”

- இவ்வாறு கமல் பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில், ‘தக் லைஃப்’ படச் சுவரொட்டிகளைக் கன்னட அமைப்பினர் கிழித்து வருகின்றனர்.

தமிழ் குறித்து, தமிழக உரிமை குறித்து, தமிழ்த் திரைப்பட உலகினர் பேசினால் அவர்களின் படத்திற்கு கன்னட அமைப்பினர் தடைபோடுவது புதிதல்ல!

காவிரி நீர் போராட்டத்தைத் தமிழ்த் திரையுலகினர் நடத்தியபோது, அதில் கலந்துகொண்டு பேசிய சத்யராஜ், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவது குறித்துப் பேசினார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு சத்யராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ‘பாகுபலி’ படத்தை வெளியிட தடைபோட்டதுடன், ‘சத்யராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றும் கன்னட அமைப்புகள் போராடின.

பெரிய பட்ஜெட் படமான ‘பாகுபலி’ வெளியாவதில், தன்னால் எந்தப் பிரச்சினையும் இருக்கக் கூடாது என்பதால் வருத்தம் தெரிவித்து, அறிக்கை விட்டார் சத்யராஜ்.

காவிரி நதிநீர்ப் பங்கீடு, ஒகேனேகல் குறித்து தமிழகத்திற்கு ஆதரவாகப் பேசிய ரஜினியும் சில பிரச்சினைகளைச் சந்தித்தார்.

‘குசேலன்’ படத்திற்குத் தடையும் போடப்பட்டது. பின்னர் ரஜினி சமாதான அறிக்கை வெளியிட்ட பிறகே, ‘குசேலன்’ படம் வெளியானது.

தமிழ் குறித்தும் தமிழக நதிநீர் உரிமை குறித்தும் நியாயமான உணர்வை தமிழ்த் திரைத்துரையினர் வெளிப்படுத்தினால் அவர்கள் நெருக்கடியைச் சந்திப்பது வாடிக்கையாக இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்