சென்னை: மொழிப்போர் தியாகி என்றும் ‘எல்ஜி’ என்றும் தமிழ் மொழிப் பற்றாளர்களாலும் அரசியல் வட்டாரத்திலும் அன்புடன் அழைக்கப்பட்ட திமுகவின் மூத்த தலைவர் எல்.கணேசன் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணியளவில் தஞ்சாவூர், பாலாஜி நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் காலமானார்.
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராடிய மொழிப்போர் தியாகியுமான எல். கணேசன் (92), வயது முதிர்வு காரணமாக இன்று (4.1.26) காலமானார். இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட தமிழகத் தலைவர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1965ஆம் ஆண்டு நடைபெற்ற புகழ்பெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்று செயல்பட்டதால், ‘மொழிப்போர் தளபதி’ என்று அன்போடு அழைக்கப்பட்டார்.
அரசியல் வட்டாரத்தில் ‘எல்.ஜி’ என்று அழைக்கப்பட்ட அவர், தி.மு.கவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும், உயர்மட்டத் திட்டக்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இடையில் சில காலம் ம.தி.மு.கவிற்குச் சென்று, மீண்டும் தனது தாய் கழகமான தி.மு.கவிற்கே திரும்பிச் செயல்பட்டு வந்தார்.
தமிழக முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.க. ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் மறைந்த செய்தி குறித்து வேதனை அடைந்தேன். மொழிப்போர் களத்தில் இந்தி ஆதிக்கத்திற்கு எதிராக புறப்பட்ட தளகர்த்தர்களில் எல்.கணேசன் மிகவும் முக்கியப் பங்காற்றியவர். சட்டமன்றம், நாடாளுமன்றம் என முழங்கிய கணேசனை இனி காண முடியாது என்பதை எண்ணும்போது வேதனை அடைகிறேன். திராவிட இயக்க கொள்கைகள் மீது பற்று கொண்டு மக்களின் நன்மதிப்பை பெற்றவர். எல்.கணேசன் என்றும் நம் நெஞ்சங்களில் நிறைந்திருப்பார்,” என திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

