சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவுவிழாவை ஒட்டி வெளியிடப்பட்ட அவரது உருவம் தாங்கிய நினைவு நாணயங்கள் ஒரே நாளில் ரூ.50 லட்சத்திற்கு விற்பனையாயின.
இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இம்மாதம் 18ஆம் தேதி நடந்த நிகழ்வில் மறைந்த முதல்வர் கருணாநிதியின் நினைவு நாணயத்தை வெளியிட்டார்.
திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் அந்நாணயம் விற்பனைக்குக் கிடைக்கிறது. ரூ.100 மதிப்புள்ள அந்நாணயம் 10,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 20) மட்டும் 500 நாணயங்கள் விற்பனையாகின. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.50 லட்சம்.
திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் அண்ணா அறிவாலயத்திற்கு சென்று ஆர்வமுடன் நாணயங்களை வாங்கிச் செல்வதாகக் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு நாணயம் இலவசமாக வழங்கப்படுகிறது.
இவ்வேளையில், தாங்களும் ரூ.100 கொடுத்து திரு கருணாநிதியின் நினைவு நாணயத்தை வாங்க வழிவகை செய்ய வேண்டும் என்று திமுக தொண்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தமிழக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

