டாஸ்மாக் மதுபான விலை உயர்வை எதிர்த்து வழக்கு

டாஸ்மாக் மதுபான விலை உயர்வை எதிர்த்து வழக்கு

கோப்புப் படம்: ஈடிவி பாரத்

14 Nov 2026 - 4:25 pm

1 mins read

சென்னை: டாஸ்மாக் மதுபானங்களின் சில்லறை விற்பனை விலையில் சுற்றுச்சூழல், சமூகநல வரியாக 10 ரூபாய் உயர்த்தப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுபான விற்பனைக்கான உரிமம் பெற்றுள்ள கேளிக்கை விடுதிகள், நட்சத்திர ஹோட்டல்கள் சங்கம் சார்பில், அதன் செயலாளர் எம். ஜெய்கணேஷ் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் காலி மதுப்புட்டிகளைத் திரும்பப் பெறும் வகையில் மதுவிலக்கு அமலாக்கத் துறை ஆணையர் கடந்த 2022ஆம் ஆண்டு ஒரு சுற்றறிக்கை வெளியிட்டதாகவும் அதன்படி, டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்கும்போது ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்பட்டு, மதுப்புட்டிகளைத் திருப்பி வழங்கும்போது அந்தத் தொகை திரும்பத் தரப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது எந்தவித நியாயமான காரணமும் இன்றிச் சுற்றுச்சூழல், சமூகநல வரியாக மதுபானங்களின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையில் ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது என்றும் இது முற்றிலும் சட்டவிரோதமானது என்றும் திரு ஜெய்கணேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், கேளிக்கை விடுதிகளில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மதுபானங்களை வாங்கித் தங்கள் வீடுகளுக்கும் எடுத்துச் செல்கின்றனர். அவர்களின் வீடுகளைத் தேடிச்சென்று காலிப் புட்டிகளைச் சேகரிக்க இயலாது என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், இதுதொடர்பாக விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்