‘துரந்தர்-2’ படத்துக்கு தமிழகத்தில் தடை விதிக்கக்கோரி வழக்கு

‘துரந்தர்-2’ படத்துக்கு தமிழகத்தில் தடை விதிக்கக்கோரி வழக்கு

1 mins read
ca0acb8e-8b7c-4951-8d82-46bdc08b157a
‘துரந்தர்’ படத்தில் ரன்வீர் சிங். - படம்: நியூஸ்18

சென்னை: ‘துரந்தர்’ இந்திப் படத்தின் இரண்டாம் பாகத்தை தமிழகத்தில் வெளியிட தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டது.

இந்தித் திரையுலகில் பெரும் வசூலை ஈட்டிய ‘துரந்தர்’ படத்தில் ரன்வீர் சிங் நாயகனாக நடித்துள்ளார். இதன் முதல் பாகம் உலகெங்கும் 1,300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலை ஈட்டியது.

இதையடுத்து, கடந்த மார்ச் 19ஆம் தேதி இப்படத்தின் இரண்டாம் பாகம் திரையரங்குகளில் வெளியானது. மூன்று நாள்களிலேயே இப்படம் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாயை வசூலித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, இரண்டாம் பாகமும் ரூ.1,500 கோடி வசூல் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தைத் தமிழகத் திரையரங்குகளில் திரையிட தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தர்மாதிகாரி தலைமையிலான அமர்வில் வழக்கறிஞர் ஷிலா என்பவர் அவசர முறையீடு செய்தார்.

அப்போது, தமிழகத்தின் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சி குறித்த கருத்துகள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், தேர்தலுக்குப் பின்னர் ‘துரந்தர்-2’ திரைப்படத்தைத் தமிழகத்தில் வெளியிட அனுமதிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

எனினும், திரைப்படம் ஏற்கெனவே வெளியாகிவிட்டதால் இந்த முறையீட்டை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம், மனுதாரர் தரப்பு மனுவாக தாக்கல் செய்துவிட்டு பிறகு முறையீடு செய்யும்படி அறிவுறுத்தினர்.

குறிப்புச் சொற்கள்