சென்னை: தமிழறிஞர் வா.மு.சேதுராமன் காலமானார். அவருக்கு வயது 91.
மூத்த தமிழறிஞர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (91) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானார்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே ஆண்டநாயகபுரத்தில் 1935ஆம் ஆண்டு பிறந்த சேதுராமன், சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். விருகம்பாக்கம் சின்மயா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருக்கு மகன்கள் திருவள்ளுவர், கவியரசன், ஆண்டவர், தமிழ் மணிகண்டன், மகள் பூங்கொடி உள்ளனர்.
நெஞ்சத்தோட்டம், ஐயப்பன் பாமாலை, தமிழ் முழக்கம், தாய்மண், சேது காப்பியம் உள்பட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கவிதைகளை பதிப்பித்துள்ளார். பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் நிறுவனராக இருந்த இவருக்கு, பெருங்கவிக்கோ, செந்தமிழ்க் கவிமணி போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. திருவள்ளுவர் விருது, கலைமாமணி விருது, சி.பா.ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காவல்துறை மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது.
வா.மு.சேதுராமன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் தமிழார்வலர்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.