நீலகிரி: காவல் நிலையத்துக்குள் சிறுத்தை நுழைந்ததால், நீலகிரியில் பதற்றம் நிலவியது. அங்குள்ள நடுவட்டம் காவல் நிலையத்துக்குள் நுழைந்த சிறுத்தை, அங்குமிங்கும் சிறிது நேரம் சுற்றித் திரிந்துவிட்டு, மனித நடமாட்டம் இல்லாததால் புறப்பட்டுச் சென்ற காட்சிகள் காவல்நிலைய கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளன.
வனப்பகுதிகள் அதிகம் உள்ள நீலகிரி மாவட்டத்தில் விலங்குகள் நடமாட்டமும் அதிகம். புலி, கரடி, சிறுத்தை என பல வன விலங்குகள் அங்கு நடமாடுவது வழக்கமானதுதான்.
இந்நிலையில், நடுவட்டம் காவல் நிலையத்துக்குள் நள்ளிரவு வேளையில் ஒரு சிறுத்தை திடீரென புகுந்தது.
அப்போது அங்கிருந்த ஒரே ஒரு காவலர் அதைப் பார்த்துவிட்டதால், சத்தம் போடாமல் ஒளிந்துகொண்டார். அவரைக் கவனிக்காத சிறுத்தை, ஓரிரு நிமிடங்களில் அங்கிருந்து கிளம்பிச் சென்றது.
இதையடுத்து, இந்தக் காவலர் காவல் நிலையத்தின் முன்வாசல் கதவை அடைத்துவிட்டு, உயரதிகாரிகளுக்கும் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.
தற்போது சிறுத்தை தீவிரமாகத் தேடப்பட்டு வரும் நிலையில், கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகி உள்ளன.
நடுவட்டம் பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்ட நிலையில், சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். அங்கு மக்களிடையே அச்சம் நிலவுகிறது.