சென்னை: தமக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், உலகெங்கிலும் இருந்து வாழ்த்து மழையைப் பொழிந்த திரைப்படத்துறை, ஊடகத் துறை நண்பர்கள், நலம்விரும்பிகள், தன் நெஞ்சில் குடியிருக்கும் தவெக தொண்டர்கள் ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.
“மக்களுக்கு சேவை செய்வதற்கான எனது பயணத்தை நீங்கள் அளிக்கும் ஆதரவு மேலும் ஊக்குவிக்கிறது.
“பிரகாசமான எதிர்காலத்துக்காக நாம் அனைவரும் ஒன்றாக அணிவகுத்துச் செல்வோம்,” என விஜய் தமது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, விஜய்யின் பிறந்தநாளையொட்டி ஜூன் 22ஆம் தேதி தவெக தொண்டர்கள் அன்னதானம் செய்து, பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை புறநகர் கிழக்கு மாவட்டத்தின் செயலாளர் பாபு தலைமையில், கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த பெண் நிர்வாகிகள் உடல் உறுப்பு தானம் செய்தனர்.
15 நிர்வாகிகள் உடல் உறுப்பு தானம் செய்துள்ள நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் உறுப்பு தானம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

