சென்னை: “திமுக ஒரு மக்கள் விரோத அரசாங்கம். இந்த ஆட்சியை அகற்ற, ஒருமித்த கருத்துடைய கட்சிகள் எங்களுடன் கூட்டணியில் இணையலாம்,” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியபோது, “ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்போடு ரூ.5,000 ரொக்கத்தைத் தமிழக அரசு வழங்க வேண்டும்.
“கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்தோம். எந்த ஆட்சிக்கும் ஏற்படாத வறட்சி, புயல், கொரோனா போன்ற சவால்களைச் சந்தித்தோம். குறிப்பாக, கொரோனா தடுப்புப் பணிகளுக்காக மட்டும் ரூ.40 ஆயிரம் கோடி செலவு செய்தோம்.
ஆனால், தற்போதைய திமுக ஆட்சியில் கடன் மட்டுமே வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். திமுக தனது ஆட்சியை நிறைவு செய்யும்போது, சுமார் ரூ.5 லட்சம் கோடி கடன் உள்ள மாநிலமாகத் தமிழகம் இருக்கும். இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலமாகத் தமிழகம் மாறும் நிலை உள்ளது. இதுதான் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியின் சாதனை.
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணியில் போலி வாக்காளர்கள் மட்டுமே நீக்கப்படுகிறார்கள்; இதனால் கள்ள ஓட்டு போட முடியாது என்பதால் ஸ்டாலின் பயப்படுகிறார் என்றார்.
100 நாள் வேலைத் திட்டத்தை 125 நாட்களாக உயர்த்திய மத்திய அரசைப் பாராட்ட வேண்டும் என்றும், ரயில் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

