சென்னை: சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில் ஏற்கெனவே அறிவித்தபடி, வியாழக்கிழமை (ஏப்ரல் 23) தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுவதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்று நாள்கள் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
ஏப்ரல் 21 முதல் 23 வரை மூன்று நாள்களும் தொடர்ச்சியாகவும் வாக்குகள் எண்ணப்படும் மே 4ஆம் தேதியும் மாநிலம் முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டு இருக்கும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
மூன்று நாள் தொடர் விடுமுறை என்பதால் ஏப்ரல் 20ஆம் தேதி மதுக்கடைகளில் மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.
ஏராளமானோர் அடுத்த மூன்று நாள்களுக்குத் தேவையான மது வகைகளை மொத்தமாக வாங்கிச் சென்றனர். இதனால் திங்கட்கிழமை (ஏப்ரல் 20) ஒரே நாளில் மட்டும் ரூ.400 கோடி மதிப்புள்ள மது வகைகள் விற்பனையாகின.
கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது ரூ.400 கோடிக்கு மது விற்பனை நடந்ததாகக் கூறப்பட்டது. தற்போதைய விற்பனை அதை விஞ்சியுள்ளது.
“மதுப்பிரியர்கள் பெட்டிப் பெட்டியாக மதுப்புட்டிகளை வாங்கிச் சென்றனர். ஒரு தனி நபருக்கு ஆறு முழுப்புட்டிகள் மட்டுமே வழங்கப்பட்டன.
“எதிர்வரும் மே 3ஆம் தேதியும் மது விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கள்ளச்சந்தையில் மது விற்பனையைத் தடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,” என டாஸ்மாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

