சென்னை: மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், ஊரக உள்ளாட்சித் தேர்தலை அறிவிக்க முடியாமல் தங்களது கைகள் கட்டப்பட்டுள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 37 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சிறப்பு அதிகாரிகளை நியமித்ததை எதிர்த்து வழக்கறிஞர் ஆர். பாஸ்கரன் மனுத் தாக்கல் செய்திருந்தார். உரிய காலத்தில் வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு நடைமுறைகளை முடித்துத் தேர்தல் நடத்த உத்தரவிடுமாறு அதில் கோரப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணையின்போது, ஐந்து ஆண்டு பதவிக்காலம் முடிவதற்குள் தேர்தல் நடத்தப்படாததும், சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதும் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்குப் பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ஜனவரி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாகவும், 2027ல் தான் அப்பணிகள் நிறைவடையும் என்றும் கூறினார். அதன் பின்னரே வார்டு மறுவரையறை, பட்டியலினத்தவருக்கான இடஒதுக்கீடு முடிவு செய்யப்பட்டுத் தேர்தல் அறிவிக்கப்படும் என்றார்.
கணக்கெடுப்புக்குப் பிறகு வார்டு மறுவரையறைக்கு 120 நாள்கள், இடஒதுக்கீட்டைத் தீர்மானிக்க 30 நாள்கள், தேர்தலுக்கு முந்தைய நடைமுறைகளுக்கு 90 நாள்கள் என மொத்தம் 240 நாள்கள் அவகாசம் தேவைப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
“உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் ஏன் இத்தகைய பிரச்சினைகள் எழுகின்றன? பதவிக்காலம் முடிவடைவது முன்கூட்டியே தெரிந்தும் மாநில தேர்தல் ஆணையம் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை?” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இவ்விவகாரம் தொடர்பாக மூன்று வாரங்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும் மாநில தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிட்ட நீதிபதி, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய ஆணையத்திற்கு அறிவுறுத்தினார்.
