ஓய்வூதியம் கேட்டு ஜனவரி 6ல் உள்ளாட்சிப் பணியாளர்கள் வேலை நிறுத்தம்

2 mins read
e6319583-0a41-48b7-a94d-77acdd0f897b
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடப்புக்குக் கொண்டு வர வலியுறுத்தி, அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ‘ஜாக்டோ ஜியோ’ அமைப்பு தெரிவித்துள்ளது. - படம்: தி இந்து

சென்னை: அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ‘ஜாக்டோ ஜியோ’ சார்பில், வரும் ஜனவரி 6ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக, அதன் மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளர் அமிர்த குமார் தெரிவித்துள்ளார்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடப்புக்குக் கொண்டு வரும்படி வலியுறுத்தி அவர்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.

கர்நாடகா, பஞ்சாப், ஜார்க்கண்ட் உள்ளிட்ட ஆறு மாநில அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளன.

அந்த மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும். அதனை வலியுறுத்தியே இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அமிர்த குமார் கூறினார்.

வேலை நிறுத்தம் தொடங்குவதற்கு முன்னதாக, வரும் 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதற்கு தமிழக அரசு செவிசாய்க்கவில்லை எனில், ஜனவரி 6ஆம் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அவர் தெரிவித்தார்.

பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும், லட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும், சிறப்புக் காலமுறை, தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்குக் காலமுறை ஊதியம், சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முன்னதாக நவம்பர் 18ஆம் தேதி வியாழக்கிழமை அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் இல்லாத பணியாளர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை ஒரு நாள் சம்பளத்தைப் பிடித்தம் செய்துள்ளது.

அவ்வாறு, காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தால், தமிழகத்தின் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் அனைத்தும் முடங்கிப் போய்விடும் என்று அஞ்சப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்