காதல் விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து: எம்எல்ஏவிடம் விசாரணை; காவல் அதிகாரி கைது

காதல் விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து: எம்எல்ஏவிடம் விசாரணை; காவல் அதிகாரி கைது

2 mins read
ce172747-a2c6-4d23-a086-38fc04238ae8
பூவை ஜெகன்மூர்த்தி. - படம்: ஊடகம்

சென்னை: காதல் விவகாரம் தொடர்பாக, திருவள்ளூர் அருகே சிறுவன் ஒருவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும் எம்எல்ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தி, திருவாலங்காடு காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) நேரில் முன்னிலையானார்.

அவரிடம் காவல்துறை விரிவான விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

திருவள்ளூரைச் சேர்ந்த இளையர் ஒருவர், தேனியைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டதை அடுத்து, இருதரப்பினர் இடையே மோதல் மூண்டது.

திருமணம் செய்துகொண்ட இளம்பெண்ணை மீட்க, அவரது காதலரின் 17 வயது தம்பியைச் சிலர் கடத்திச் சென்றனர்.

இந்தக் கடத்தல் விவகாரத்தில் புதிய பாரதம் கட்சித் தலைவரும் கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான பூவை ஜெகன்மூர்த்திக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து, பரபரப்பு ஏற்பட்டது. அவர் கட்டப் பஞ்சாயத்து செய்ததாகவும் அந்த இளம் பெண்ணின் தந்தைக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. அவர் திடீரெனத் தலைமறைவானார்.

மேலும், அவருக்கு காவல் உயரதிகாரி ஏடிஜிபி ஜெயராம் உதவியதாகவும் கூறப்பட்டது.

இருவரும் முன்பிணை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

கடத்தப்பட்ட சிறுவனைக் காவல்துறை தேடுவதை அறிந்த எம்எல்ஏ தரப்பு, அந்தச் சிறுவனை ஏடிஜிபி ஜெயராம் காரில் அழைத்துச் சென்று, அவனது வீட்டுக்கு அருகே இறக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

அந்தக் காரில் திருமணம் செய்துகொண்ட பெண்ணின் தந்தையும் முன்னாள் பெண் காவலர் ஒருவரும் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அந்த பெண் காவலர் மூலமாகத்தான் எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தி, ஜெயராம் ஆகியோரைத் திருமணம் செய்துகொண்ட பெண்ணின் தந்தை வனராஜா அணுகியதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

இதையடுத்து, குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் ஜூன் 17ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையாகாவிட்டால் கைது செய்யப்படுவர் என நீதிபதி எச்சரித்த நிலையில், பூவை ஜெகன் மூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், திருவாலங்காடு காவல் நிலையத்தில் முன்னிலையானார்.

இதற்கிடையே, ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்
காதல் திருமணம்கடத்தல்திமுகஎம்எல்ஏகைதுகாவல்துறை