சென்னை: நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மார்ச் 10ஆம் தேதி தொடங்க இருப்பதை அடுத்து, இன்று (மார்ச் 9ஆம் தேதி) சென்னையில் திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை, நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை ஆகியவை தொடர்பில் திமுகவின் நிலைப்பாடு என்ன, இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து கட்சி எம்பிக்களுக்கு அறிவுறுத்தப்பட இருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், எதிர்க்கட்சிகளுடன் எத்தகைய விவாதங்களில் பங்கேற்க வேண்டும் என்பது குறித்தும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்த இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.