ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 50 மொழிகளில் பேசும் இயந்திர ஆசிரியை (ரோபோ) மாணவர்களை ஈர்த்து வருகிறார்.
‘மார்க்ரெட்’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த இயந்திரம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் இயங்குகிறது.
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு 50 மொழிகளில் பேசக்கூடிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப இயந்திர ஆசிரியை அறிமுகப்படுத்தப்பட்டது இதுவே முதல் முறை எனப் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதன்கிழமை (ஏப்ரல் 9) அறிமுகப்படுத்தப்பட்ட ஆசிரியை மார்க்ரெட், மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உடனடியாகப் பதில் அளிக்கும் காணொளி, சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
சக்கரம் பொருத்தப்பட்டுள்ள இந்த இயந்திரம் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக நகர்ந்து செல்ல முடியும்.
“இந்த ரோபோ 27 இந்திய மொழி, 23 உலக மொழியில் பேசும் திறன் பெற்றது. அறிவியலின் பரிணாம வளர்ச்சி குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இதை அறிமுகப்படுத்தி உள்ளோம். வகுப்பறையில் இது பாடம் நடத்தாது; ஆனால் மாணவர்கள் கேட்கும் கேள்விக்குப் பதிலளிக்கும்,” என்று பள்ளி முதல்வர் ஷாலினி கூறினார்.