மதுரை: கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் மதுரையில் நாய்க்கடியால் 32 பேர் உயிரிழந்துவிட்டனர்.
மதுரையில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. அதனால், அவை அவ்வப்போது சிறார் உட்பட பலரையும் கடித்துவிடுகின்றன.
இதனையடுத்து, ஒவ்வொரு மாதமும் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தின்போது, நகரில் நாய்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாய்க்கடி தொடர்பான விவரங்களை வழங்கும்படி என்.ஜி. மோகன் என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் மனு அளித்திருந்தார்.
அதற்கு இராசாசி மருத்துவமனை அளித்த பதில்மூலம், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் வெறிநாய்க்கடியால் பாதிக்கப்பட்டு அரசு இராசாசி மருத்துவமனையில் மொத்தம் 133,523 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதும் அவர்களில் 32 பேர் உயிரிழந்துவிட்டதும் தெரியவந்துள்ளது.
இதன் தொடர்பில் கருத்துரைத்த திரு மோகன், “மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் அதிக அளவிற்குத் தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால், பொதுமக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். எனவே, தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அதிக அளவில் அவற்றுக்குக் கருத்தடை சிகிச்சை செய்ய வேண்டும்,” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்கள் எண்ணிக்கை குறித்து உடனடியாகக் கணக்கீட்டு ஆய்வு நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.