மதுரை: அண்மையில் மதுரையில் திறக்கப்பட்ட நகைக்கடையில் கொள்ளையடித்தது அதே பகுதியைச் சேர்ந்த இளையராக இருக்கலாம் எனக் காவல்துறை சந்தேகிக்கிறது.
மதுரை புறவழிச்சாலையில் இரு வாரங்களுக்குமுன் ‘தனிஷ்க்’ நகைக்கடை திறக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 12) அங்குப் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொள்ளைபோயின.
அதனையடுத்து, காவல்துறையினர் ஐந்து தனிப்படைகள் அமைத்து கொள்ளையனைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கண்காணிப்புப் படக்கருவிகளில் பதிவான காட்சிகளையும் அவர்கள் ஆராய்ந்தனர். அதில், கொள்ளைபோன நகைக்கடைக்கு அருகிலிருந்து அதிகாலை 3.30 மணியளவில் தலைக்கவசம், முகமூடி அணிந்தபடி கொள்ளையன் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற காட்சிகள் கிடைத்தன.
கொள்ளை நடந்த கடையின் பின்புறமுள்ள சாலையிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு தெருவைச் சேர்ந்த இளையர்மீது காவல்துறைக்கு ஐயம் ஏற்பட்டது.
அந்த இளையர் குறித்து விசாரித்தபோது, நகை வாங்குவதுபோல் பலமுறை அவர் அந்த நகைக்கடைக்கு வந்துசென்றது தெரியவந்தது. பல்வேறு வடிவமைப்புகளில் நகைகளைத் தேர்வுசெய்து, பின்னர் அவற்றை வாங்காமலேயே திரும்பிச்சென்றதாகக் காவல்துறைத் தனிப்படையினர் கூறினர்.
ஒவ்வொரு முறையும் வெவ்வேறு வண்ண உடையணிந்து சென்ற அவ்விளையர், தொப்பியை மட்டும் மாற்றவில்லை. அதனால் காவல்துறையினர் சந்தேகமடைந்தனர். விசாரித்ததில் அந்த ஆடவர் நகைக்கடைக்கு அருகிலுள்ள தெருவில் வசிக்கிறார் என்பதையும் காவல்துறை உறுதிப்படுத்தியதாக ‘இந்து தமிழ் திசை’ செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த இளையர் யூடியூப், இன்ஸ்டகிராம் போன்ற சமூக ஊடகங்களில் தீவிரமாகச் செயல்பட்டு வந்ததாகவும் மேலும் விலை உயர்ந்த மோட்டார்சைக்கிளைக் கொண்டு சாகசங்கள் செய்து, அவற்றைக் காணொளிகளாக வெளியிட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதனையடுத்து, துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையில் காவல்துறையினர் அந்த இளையரின் வீட்டிற்குள் புகுந்தனர். ஆனால், அப்போது அவர் வீட்டில் இல்லை. அவர் சென்னைக்குச் சென்றுவிட்டதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனையடுத்து, அவரைத் தேடி காவல்துறைத் தனிப்படை சென்னைக்கு விரைந்துள்ளது.
அவர் வேறு இடங்களில் நகைகளைப் பதுக்கிவைத்துள்ளாரா என்றும் காவல்துறை தீவிரமாகத் தேடிவருகிறது.
சொகுசான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, அவர் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
