மதுரை: ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மதுரையில் உள்ள பிரபல நகைக்கடையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில், தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளியான யூடியூபர் நிஷாந்தை தனிப்படைக் காவல்துறையினர் திங்கட்கிழமை (நவம்பர் 16) கைது செய்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 14ஆம் தேதி மதுரையில் புதிதாகத் திறக்கப்பட்ட மூன்று மாடிகள் கொண்ட ‘தனிஷ்க்’ நகைக்கடையின் மூன்றாவது தளத்தில் பாதுகாப்புப் பெட்டகங்களை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 12) அதிகாலை 3 மணியளவில் கட்டடத்தின் பின்புறம் இருந்த கட்டுமானச் சாரத்தின் வழியாக உள்ளே புகுந்து, பாதுகாப்பு பாதுகாப்புப் பெட்டகங்களை உடைத்துக் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து தனிப்படை அமைத்து காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டனர். கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகள், ரகசியத் தகவல்களின் அடிப்படையில், பிரபல ‘யூடியூபர்’ மீனாட்சி உள்ளிட்ட இருவரைக் காவல்துறை முதலில் கைது செய்தது.
தொடர்ந்து, தலைமறைவாக இருந்த நிஷாந்தின் தந்தை சுரேஷைப் பிடித்து விசாரித்ததில், அவரிடமிருந்து ஐந்து கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், மீனாட்சி அளித்த தகவலின் பேரில், மதுரை அருகே ஆள்நடமாட்டமில்லாத வயல்வெளியில் எருக்கலாஞ் செடிகளுக்கு நடுவே மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த மீதமுள்ள தங்க நகைகளையும் காவல்துறையினர் தோண்டி மீட்டனர்.
இந்நிலையில், இக்கொள்ளைச் சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டு கடந்த ஐந்து நாள்களாகப் பல்வேறு மாவட்டங்களில் பதுங்கித் திரிந்த யூடியூபர் நிஷாந்தை, அதியமான் கோட்டை தனிப்படை காவல்துறையினர் திங்கட்கிழமை (நவம்பர் 16) சுற்றிவளைத்துப் பிடித்தனர்.
சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட இளம் பிரபலங்கள், ஆடம்பர மோகத்தால் கொள்ளையில் ஈடுபட்டது மதுரையில் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
