மதுரை: தமிழகத்தில் நாள்பட்ட நோய்ப் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பது அண்மைய ஆய்வு முடிவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
அப்போலோ மருத்துவக் குழுமம் மேற்கொண்ட இந்த ஆய்வின்போது 30 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களிடம் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
இதன்மூலம் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் அதிகமாக இருக்கும் தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குறிப்பாக, மூன்று இளையர்களில் இருவருக்கு நாள்பட்ட நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் ஐந்தில் ஒருவர் நீரிழிவு நோய்க்கு முந்தைய கட்டத்தில் இருப்பதாகவும் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
தமிழக மக்கள் இடையே உடல் பருமன் பிரச்சினையும் அதிகரித்து வருகிறது. அங்குப் பணிக்குச் செல்வோரில் பத்து பேருக்கு எட்டுப் பேர் என்ற விகிதத்தில் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, மிக இயல்பாக இவர்களில் சரிபாதி பேர் நீரிழிவு நோய்ப் பாதிப்புக்குள்ளாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் பலருக்கு நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் காணப்படுகின்றன.
மார்பகப் புற்றுநோய், ரத்த சோகை, வைட்டமின் குறைபாடு ஆகியவை பெண்கள் மத்தியில் அதிகம் உள்ளது.
நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், ரத்த சோகை, உடல் பருமன் ஆகிய பாதிப்புகளில் இந்திய அளவில் மதுரை, திருச்சி நகரங்கள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன என்று அப்போலோ குழுமத்தின் தலைவர் மருத்துவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தப் பட்டியலில் சென்னை ஐந்தாம் இடத்திலும் பெங்களூரு, மும்பை ஆகியவை மூன்று, நான்காம் இடங்களிலும் உள்ளன.
மதுரையில் நீரிழிவு நோயால் 36% பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பாதிப்பு விகிதம் திருச்சியில் 34%ஆகவும் சென்னையில் 25% ஆகவும் உள்ளது.
அதேபோல் உயர் ரத்த அழுத்தத்தால் மதுரையில் 26 விழுக்காட்டினர், திருச்சியில் 20% பேரும் சென்னையில் 26% பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரத்த சோகை பாதிப்பு அதிகமுள்ளோர் பட்டியலில் சென்னை 38 விழுக்காட்டுடன் முதலிடத்திலும் திருச்சி (32%), மதுரை (26%) ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
உடல் பருமன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆக அதிகமாக, திருச்சியில் 84%ஆகப் பதிவாகி உள்ளது. மதுரை (83%), சென்னை (77%) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

