திமுக அமைப்பு முறையில் மிகப்பெரிய மாற்றம்: மு.க.ஸ்டாலின்

திமுக அமைப்பு முறையில் மிகப்பெரிய மாற்றம்: மு.க.ஸ்டாலின்

2 mins read
187d8aae-2852-4616-89c6-9c6ab3d3af88
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை (மே 14) நடைபெற்றது. - படம்: இந்து தமிழ் திசை
multi-img1 of 2

சென்னை: திமுகவின் அமைப்பு முறையில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவர உள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை (மே 14) நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய திரு ஸ்டாலின், திமுக தலைவர் என்ற முறையில் தோல்விக்குப் பொறுப்பேற்பதாகக் கூறினார்.

“கடந்த ஐந்து ஆண்டுகள் கடுமையாக உழைத்தேன், உங்களையும் உழைக்க வைத்தேன். என் சக்திக்கு மீறி உழைத்தேன். இதுவரை எந்த அரசும் செய்யாத சாதனைகளைச் செய்தோம். தோல்விக்கு யாரையும் கை காட்டாதீர்கள், அடுத்தவர்மேல் பழிபோடாதீர்கள். கட்சித் தலைவர் என்ற முறையில் நானே பொறுப்பேற்றுக்கொள்கிறேன்,” என்றார் அவர்.

அண்மைய தேர்தலில் திமுக கூட்டணிக்கு 73 இடங்கள் கிடைத்துள்ளன. இது முந்தைய காலங்களில் ஆட்சியை இழந்தபோது வென்ற இடங்களைவிட அதிகம் என்று குறிப்பிட்ட அவர், வெற்றி-தோல்வி என்பது அரசியலில் வழமை என்றார்.

“தோல்விக்கான காரணங்கள் குறித்துத் தொகுதிவாரியாக, அனைத்து நிலை நிர்வாகிகள் மத்தியிலும் கருத்து கேட்க வேண்டும்,” என்று கூறிய அவர், “தோல்விக்கான காரணங்களை ஆராய, கழகத்தின் சார்பில் கள ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டு, அக்குழு 20 நாள்களில் அறிக்கை அளிக்கும்,” என்றார்.

மேலும், தொண்டர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கத் தனி இணையத்தளம் தொடங்கப்படும். அதன் அடிப்படையில் கட்சி மறுசீரமைக்கப்படும்.

இனிவரும் காலங்களில் சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், குழுப் பூசல்களைத் துறந்து நிர்வாகிகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“ஒருவேளை யாராவது, தம்மால் செயல்பட முடியாது என்று நினைத்தால் முன்வந்து விலகிக்கொள்ளலாம்,” என்றும் திரு ஸ்டாலின் கூறினார்.

குறிப்புச் சொற்கள்