திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் மாம்பழச் சின்னம் முடக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், கட்சியும் சின்னமும் தன்வசம் வரும் என அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த சில வாரங்களில் தமிழகத்தில் மிகப்பெரிய கூட்டணி அமையும் என்றும் அதில் பாமக இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“எங்கள் கூட்டணிதான் நிச்சயம் வெற்றி பெறும். கூட்டணி அமைந்தால் எங்கள் அணி வேகமாக முன்னேறி வெற்றிபெறும்,” என்றார் அன்புமணி.
மேலும் மாம்பழச் சின்னமும் தங்களிடம்தான் இருக்கிறது என்றும் இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றம் அப்படித்தான் தீர்ப்பு வழங்கியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“தற்போது டெல்லி உயர் நீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது. தேர்தல் ஆணையம் கட்சி சின்னம் தொடர்பாக வழங்கிய அனுமதி, அங்கீகாரம் குறித்து நீதிமன்றம் எந்தக் கருத்தும் சொல்லவில்லை. எனவே எந்தக் குழப்பமும் இன்றி பாமக தலைவராக நான் நீடிப்பேன்.
“யாரும் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம். அவ்வாறு செய்தால் எங்களுக்குத்தான் கூடுதல் வாக்குகள் கிடைக்கும்,” என்றார் அன்புமணி.
விதிகளின்படி, இந்தியத் தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 2026 வரை, தன்னை பாமக தலைவராக நியமித்துள்ளது என்றும் அதில் குழப்பம் இல்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

