கரூர்: கரூர் துயரச் சம்பவத்தை அடுத்து, தவெக கட்சித் தலைவர் விஜய் எந்த நேரத்திலும் கைது செய்யப்படக்கூடும் என்று வெளியான தகவலால் அக்கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவியது.
கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியான நிலையில், விஜய் உடனடியாக பிரசாரம் நடந்த பகுதியில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
கரூரில் இருந்து நேராக திருச்சி சென்ற அவர், அங்கு செய்தியாளர்களைச் சந்திக்க மறுத்துவிட்டார். பின்னர் அவர் தனி விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டதாகவும் சனிக்கிழமை (செப்டம்பர் 27) இரவு 11 மணியளவில் சென்னை சென்றடைவார் என்றும் தகவல்கள் தெரிவித்தன.
இதனிடையே, காவல்துறையினர் அறிவுறுத்தலையும் பிரசாரக் கூட்டத்தில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளையும் தவெகவினர் சரிவரப் பின்பற்றவில்லை என்று பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இதையடுத்து, அலட்சியமாகச் செயல்பட்டதன் பேரில் தவெக நிர்வாகிகள் மீதும் விஜய் மீதும் வழக்குப் பதிவாகலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும், அவரை காவல்துறை உடனடியாக கைது செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, மீட்புப் பணிகளில் காவல்துறைக்கு தவெக தொண்டர்களும் உதவி செய்தனர்.
இறந்தவர்கள் உடலைப் பார்த்து தவெகவினர் கதறி அழுதனர்.
தொடர்புடைய செய்திகள்
விஜய்யின் மக்கள் சந்திப்பு பிரசாரக் கூட்டங்களுக்கும், அதற்கு முன்பு தவெக மாநில மாநாட்டுக்கும் தமிழக காவல்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்ததாகக் கூறப்பட்டது.
இதனால் வேண்டுமென்றே திமுக அரசு தங்களை முடக்கப் பார்ப்பதாக தவெகவினர் சாடினர்.
“எங்களை மிரட்டிப் பார்க்கிறீர்களா” என்று விஜய்யும்கூட முதல்வர் ஸ்டாலினுக்கு நேரடியாக கேள்வி விடுத்தார்.
இந்நிலையில், அவரது பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் 30க்கும் மேற்பட்டோர் மாண்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.