தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விஜய் கைதாகக்கூடும் எனப் பரவும் தகவல்: தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் கடும் அதிர்ச்சி

2 mins read
179d5175-21ff-4d1b-b1c1-0c5e3d52f983
விஜய். - படம்: ஊடகம்

கரூர்: கரூர் துயரச் சம்பவத்தை அடுத்து, தவெக கட்சித் தலைவர் விஜய் எந்த நேரத்திலும் கைது செய்யப்படக்கூடும் என்று வெளியான தகவலால் அக்கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவியது.

தவெக கரூர் மாவட்ட நிர்வாகிகள் 4 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியான நிலையில், விஜய் உடனடியாக பிரசாரம் நடந்த பகுதியில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

கரூரில் இருந்து நேராக திருச்சி சென்ற அவர், அங்கு செய்தியாளர்களைச் சந்திக்க மறுத்துவிட்டார். பின்னர் அவர் தனி விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டார்.

இதனிடையே, காவல்துறையினர் அறிவுறுத்தலையும் பிரசாரக் கூட்டத்தில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளையும் தவெகவினர் சரிவரப் பின்பற்றவில்லை என்று பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

இதையடுத்து, அலட்சியமாகச் செயல்பட்டதன் பேரில் தவெக நிர்வாகிகள் மீதும் விஜய் மீதும் வழக்குப் பதிவாகலாம் என்றும் கூறப்பட்டது.

மேலும், விஜய்யை காவல்துறை உடனடியாக கைது செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, மீட்புப் பணிகளில் காவல்துறைக்கு தவெக தொண்டர்களும் உதவி செய்தனர்.

இறந்தவர்கள் உடலைப் பார்த்து தவெகவினர் கதறி அழுதனர்.

விஜய்யின் மக்கள் சந்திப்பு பிரசாரக் கூட்டங்களுக்கும், அதற்கு முன்பு தவெக மாநில மாநாட்டுக்கும் தமிழக காவல்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்ததாகக் கூறப்பட்டது.

இதனால் வேண்டுமென்றே திமுக அரசு தங்களை முடக்கப் பார்ப்பதாக தவெகவினர் சாடினர்.

“எங்களை மிரட்டிப் பார்க்கிறீர்களா” என்று விஜய்யும்கூட முதல்வர் ஸ்டாலினுக்கு நேரடியாக கேள்வி விடுத்தார்.

இதனிடையே, சென்னையில் உள்ள விஜய் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

தெலுங்கானாவில் ‘புஷ்பா-2’ பட வெளியீட்டின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி ரேவதி என்ற 39 வயது பெண் உயிரிழந்தது தொடர்பாக, முன்னணி தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார்.

அதேபோல், கரூர் சம்பவத்துக்காக விஜய் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்