சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கூடுதல் இடங்களைக் கேட்பதால் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.
செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, தங்களுக்கு கூடுதல் தொகுதியை ஒதுக்கவேண்டும் எனத் திமுகவிடம் கேட்டுக்கொண்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் முன்பைவிட அதிக கட்சிகள் இணைந்திருப்பதாக திமுக குழு தெரிவித்திருப்பது நியாயமானது என்று குறிப்பிட்ட அவர், தங்கள் தரப்பில் கேட்கப்பட்ட தொகுதிகளை ஒதுக்காவிட்டாலும், கடந்த முறையைவிட இப்போது அதிக எண்ணிக்கையில் தொகுதிகளைக் கொடுக்கவேண்டும் என்றார்.
“எங்களுடைய கோரிக்கை குறித்து திமுக தலைவருடன் பேசிவிட்டு புதன்கிழமை சந்திக்கலாம் என்று திமுக குழு கூறியுள்ளது. எனவே, மீண்டும் பேசுவோம்,” என்றார் சண்முகம்.
கடந்த முறை திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆறு தொகுதிகளில் போட்டியிட்டது.
இம்முறை திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக, மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் தொகுதிப் பங்கீட்டுக்கு ஒப்புக்கொண்டுள்ளன.
இரு கட்சிகளுடனும் உடன்பாடு காணப்பட்டால் நாளையே தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பை திமுக தலைமை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

