தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மக்கள் சந்திப்பு பிரசாரம்

1 mins read
edb8755f-ff44-49fc-a772-e95a4b37a905
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்க நடைப்பயணத்தை சென்னையில் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஜூன் 11ஆம் தேதி தொடங்கி வைத்து துண்டு பிரசுரங்களை வழங்கினார்.  - படம்: ஊடகம்

சென்னை: மத்திய, மாநில அரசுகள் அரசியல் சாசனத்துக்கு விரோதமாகச் செயல்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.

தேர்தலில் அளித்த வாக்குறுதிகளைத் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்கட்சி சார்பில் சென்னையில் பிரசார இயக்க நடைப்பயணம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், தமிழகத்தில் உள்ள திமுக அரசாங்கம் 99% தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்றார்.

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

“திமுக ஆட்சிக்கு வந்தால், மின் அளவீடு மாதந்தோறும் எடுக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை அளித்தனர். நீர்நிலை ஆக்கிரமிப்பு என்று கூறி சாதாரண மக்களை வெளியேற்றக்கூடாது. இப்பிரச்சினையில் தமிழக அரசு ஒரு கொள்கை முடிவுக்கு வரவேண்டும்.

“பாஜக - அதிமுக ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியை ஏற்படுத்தி உள்ளனர். இக்கூட்டணியைத் தோற்கடிக்கும் வலிமை தற்போதைய அரசியல் சூழ்நிலையில் திமுக கூட்டணிக்குத்தான் உள்ளது.

“எனவே, திமுக தலைமையிலான கூட்டணியில் 2026 தேர்தலைச் சந்திக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. எனினும் கடந்த தேர்தலைவிட இம்முறை நாங்கள் அதிக தொகுதிகள் கேட்போம்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்