திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள்

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள்

1 mins read
f88f8b69-ca31-418b-8943-f5455d600c26
ஒரு கட்டத்தில், திமுக கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் விலக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியானது. - படம்: தினத்தந்தி

சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கடந்த முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆறு இடங்களில் போட்டியிட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. கடந்த தேர்தலைவிட இம்முறை கூடுதல் தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாகத் தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சிகள், இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என திமுக தலைமையிடம் வலியுறுத்தி வந்தன. ஆனால், திமுக தலைமை இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

தமிழகத்தில் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க திமுக மறுப்பது நியாயமற்றது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் சண்முகம் வெளிப்படையாகத் தெரிவித்தார்.

ஒரு கட்டத்தில், திமுக கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் விலக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில், திடீர் திருப்பமாக திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே புதன்கிழமை (மார்ச் 18) தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

கடந்த முறை போட்டியிட்டதைவிட ஒரு தொகுதி குறைக்கப்பட்டு ஐந்து தொகுதிகள் மட்டுமே இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை ஆறு தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் இம்முறை தேர்தலுக்கு முன்பாகவே ஒரு தொகுதியை இழந்துவிட்டதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் மட்டுமே இன்னும் தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை.

குறிப்புச் சொற்கள்