சென்னை: திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் எதிர்வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன், அதிமுக ஆட்சிக்காலத்தில் நேப்பியர் பாலம் அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 6.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தடுப்புச்சுவர் கட்டிமுடிக்கப்பட்ட ஒரு மாத காலத்திற்குள் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் வரிப்பணத்தில் தரமில்லாத தடுப்புச்சுவர் கட்டப்பட்டதால் பெரும் ஊழல் நடந்திருக்கலாம் என பொது மக்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது என்றும் தடுப்புச்சுவர் ஊழல் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மேலும் ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், லால்குடி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளைச்சேர்ந்த விவசாயிகளும் பொதுமக்களும் பயனடைகிற வகையில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தரமான தடுப்பணை ஒன்றை கட்டித்தர வேண்டும் என அதிமுக சார்பில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இக்கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அவர் தமது அறிக்கையில் மேலும் கூறியுள்ளார்.

