சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் புத்தாடை விற்பனை உச்சத்தை எட்டியுள்ளது.
குறிப்பாக, சென்னை தியாகராய நகர் (தி.நகர்), ரங்கநாதன் தெரு முழுவதும் மக்கள் கூட்டம் வெள்ளம்போல அலை மோதியது.
இந்தக் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டுச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்க ஏறக்குறைய 1,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அவர்கள் உயரமான கோபுரங்களில் இருந்தும் சாதாரண உடைகளில் இருந்தபடியும் கண்காணித்து, திருடர்கள் குறித்து ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரித்தனர்.
தி.நகரில் மட்டுமல்லாது புரசைவாக்கம், குரோம்பேட்டை போன்ற மற்ற வணிகப் பகுதிகளிலும் துணிக்கடைகள் நிரம்பி வழிந்தன. புத்தாடைகள் வாங்கிய மகிழ்ச்சியில் மக்கள் அனைவரும் உணவகங்களை நாடியதால் அங்கும் கூட்டம் அலைமோதியது.
இ-காமர்ஸ் நிறுவனங்கள் சாதனைப் பதிவு
இதனிடையே, நாடு முழுவதும் நடைபெற்று வரும் பண்டிகைக் கால சிறப்பு விற்பனை தொடர்பில், நுகர்வோரின் செலவினங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளதாக முதற்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற முன்னணி மின்னணு வர்த்தக நிறுவனங்கள் (இ-காமர்ஸ்) வரலாறு காணாத விற்பனையை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளன. குறிப்பாக, மின்னியல் சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், ஃபேஷன் ஆடைகள் ஆகிய பிரிவுகளில் விற்பனை உச்சத்தை எட்டியது.
இந்த வலுவான விற்பனைப் போக்கு நாட்டின் பொருளாதார மீட்சிக்கான ஒரு முக்கிய அறிகுறியாகக் கருதப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், இது நுகர்வோரின் வாங்கும் சக்தி மற்றும் நம்பிக்கை வலுப்பெற்றுள்ளதையும் தெளிவாகக் காட்டுவதாக பொருளாதார நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.