தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பேரளவில் அதிகரிப்பு

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பேரளவில் அதிகரிப்பு

படம்: தினமணி

01 May 2026 - 8:50 pm

1 mins read

சென்னை: தமிழ்நாடு அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2026-27 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை 100,000க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

மார்ச் மாதத்தில் மொத்தம் 1,12,711 மாணவர்கள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், மழலையர் பிரிவில் 6,796 பேர், முதல் வகுப்பில் 97,737 பேர், 2 முதல் 8ஆம் வகுப்பு வரை 8,178 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டுகளைவிட குறிப்பிடத்தக்க உயர்வாகும்.

இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணங்களாக பல்வேறு நலத்திட்டங்கள், அறிவார்ந்த வகுப்பறைகள், காலை உணவுத் திட்டம், ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் போன்ற திட்டங்கள் பெற்றோரிடம் நம்பிக்கையை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கல்வித்துறை அதிகாரிகள் பல ஊர்களிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதனால் அரசுப் பள்ளி நலத்திட்டங்கள் குறித்துப் பெற்றோர் அறிந்துகொண்டனர்.

பொதுவாக ஜூன் மாதத்தில் தொடங்கும் சேர்க்கை, இப்போது மார்ச் மாதத்திலேயே தொடங்கப்பட்டுள்ளது. இது தனியார் பள்ளிகளுடன் போட்டியிட உதவுகிறது.

தமிழகத்தில் ஏறத்தாழ 37,554 அரசுப் பள்ளிகளில் 5.2 மில்லியன் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்த ஆண்டில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அத்துடன், அனைத்து அரசு, தனியார் பள்ளிகளிலும் ஆட்டிசம், அறிவுசார் குறைபாடு உள்ள குழந்தைகளைக் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என தொடக்கக்கல்வித் துறை அண்மையில் உத்தரவு பிறப்பித்துள்ளது. முந்தைய ஆண்டைவிட குறைந்தபட்சம் 50 மாணவர்களை அதிகமாகச் சேர்க்கும் அரசுப் பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசால் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

குறிப்புச் சொற்கள்
தமிழ்நாடுமாநில அரசுபள்ளிமாணவர்அதிகரிப்புதமிழகம்