சென்னை: விமான நிலையத்தில் வழக்கமாக மதுபானம், சிகரெட்டு, வாசனைத் திரவியம், ஒப்பனைப் பொருள், மின்னணுவியல் சாதனங்கள், துணிமணிகள் உள்ளிட்டவற்றை விற்கும் கடைகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
ஆனால், வழக்கத்துக்கு மாறாக அங்கு திருமணச் சேவை வழங்கும் கடை ஒன்று இருப்பதைக் காட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வலம் வருகின்றன.
‘பாரத் மேட்ரிமோனி’ என்று அழைக்கப்படும் கடை குறித்து சமூக ஊடகங்களில் மாறுபட்ட கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன. வழக்கமாக விமான நிலையத்துக்குச் செல்லும் ஒருவர், ஏராளமான வரன்களிலிருந்து தமக்குப் பொருத்தமான வாழ்க்கைத் துணையை அங்கு கண்டறிவதற்கான சாத்தியம் நிலவுவதாக இணையவாசி ஒருவர் கருத்துரைத்தார்.
“வெளிநாட்டு மாப்பிள்ளை அல்லது பெண்ணை ஈர்ப்பதற்கான உத்தி இது,” என வேறொருவர் பதிவிட்டார்.
இருந்தாலும், விமான நிலையத்தில் திருமணச் சேவை மையத்தை அமைப்பதற்கான உண்மையான காரணம் என்னவாக இருக்கும் என்பது பலரையும் யோசிக்க வைத்துள்ளது.