தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்த அமைதி எப்போதும் நீடிக்கட்டும்: பேரணிக்குப் பின் ஸ்டாலின் பதிவு

2 mins read
00551f59-c063-426d-92a9-2deb948bb0b6
எல்லையில் போர்ப் பதற்றம் அதிகரித்த நிலையில், சென்னையில் இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக மு.க. ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை மாலை பேரணி நடைபெற்றது. - படம்: ஊடகம்

சென்னை: இந்தியா, பாகிஸ்தான் இடையேயான மோதல் தற்போது முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து, ‘இந்த அமைதி எப்போதும் நீடிக்கட்டும்’ என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்த அறிவிப்பை தாம் வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்லையில் பதற்றம் அதிகரித்த நிலையில், சென்னையில் இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக திரு ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை மாலை பேரணி நடைபெற்றது.

அதன் முடிவில் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் உருவப்படங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து, இந்திய எல்லையைப் பாதுகாக்கும் வீரர்களின் துணிச்சலுக்கு நெஞ்சார்ந்த வீர வணக்கங்கள் என்று தமது எக்ஸ் தளப் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

“இந்திய முப்படை வீரர்களுக்கு ஆதரவாகத் தமிழ்நாடு பேரணியாகத் திரண்டது. போர்நிறுத்த அறிவிப்பை வரவேற்கிறேன். இந்த அமைதி எப்போதும் நீடிக்கட்டும்,” என்று ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

சனிக்கிழமை நடந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இதனால் சென்னை, கடற்கரை சாலையில் பொதுமக்கள் திரளாகக் கூடியிருந்தனர்.

முன்னாள் ராணுவ வீரர்கள், சமயப் பிரதிநிதிகள், அமைச்சர்கள், திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்கள் என ஏராளமானோர் பேரணியில் பங்கேற்றதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.

முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் கைகளில் தேசியக் கொடிகளை ஏந்தி பேரணியில் பங்கேற்றனர்.

இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக நடந்த பேரணிக்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தமது சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

‘சென்னைக்கு இதுவரை எந்த அச்சுறுத்தலும் வரவில்லை’

இதனிடையே, இந்தியா, பாகிஸ்தான் இடையேயான மோதல் பதற்ற நிலையை எட்டியபோதும், சென்னை மாநகரத்துக்கு இதுவரை எந்த அச்சுறுத்தலும் வரவில்லை என சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.

சென்னை செய்தியாளர் மன்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

“சென்னையில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்கள், கோயில்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

“சந்தேக நபர்களைக் கண்டறிய மக்களோடு மக்களாக காவல்துறையினர் சாதாரண உடையிலும் சீருடையிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

“அது மட்டுமில்லாமல், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் சென்னை முழுவதும் வாகன சோதனையும் ஒருபுறம் நடைபெற்று வருகிறது,” என்றார் ஆணையர் அருண்.

சென்னை மாநகரத்துக்கு இதுவரை தனிப்பட்ட முறையில் எந்தவொரு அச்சுறுத்தலும் வரவில்லை என்று குறிப்பிட்ட அவர், சேப்பாக்கம் விளையாட்டு அரங்கிற்கு மட்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது என்றார்.

குறிப்புச் சொற்கள்