அகமதாபாத்: இண்டிகோ விமான என்ஜினில் தீப்பிடித்த சம்பவம் அகமதாபாத் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வியாழக்கிழமை (ஜூலை 24) காலை, 60 பயணிகளுடன் டையூ நகரை நோக்கி அந்த விமானம் புறப்படத் தயாராக இருந்தது.
ஓடுபாதையில் காத்திருந்த விமானத்துக்கு உரிய அனுமதி கிடைத்ததும் மேலெழுந்து பறக்கும் நேரத்தில், விமானத்தின் ஒரு என்ஜினில் திடீரெனத் தீப்பிடித்ததைக் கண்டு விமானிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, உடனடியாக விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார் தலைமை விமானி. அவர் ‘மேடே, மேடே’ என்ற அவசரகால அழைப்புக்கான வார்த்தைகளைப் பயன்படுத்தியதை அடுத்து, விமான நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டது.
தீயணைப்பு, மீட்பு வாகனங்கள் தயாராகின. ஓரிரு நிமிடங்களில் விமானத்தை மீண்டும் அதை நிறுத்தும் இடத்துக்கு கொண்டு வந்தார் விமானி.
உடனடியாக விமானத்தில் தீ மூண்ட பகுதியில் தண்ணீர் பீய்ச்சப்பட்டு, தீ அணைக்கப்பட்டது. பயணிகளும் விமானப் பணியாளர்களும் உடனடியாக பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர்.
இதனால் யாருக்கும் எந்தவிதக் காயமும் ஏற்படவில்லை.
இது தொடர்பாக இண்டிகோ விமான நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதில், “வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். அவர்களுக்கு விருப்பமான அடுத்த விமானத்தில் பயணம் செய்ய அல்லது டிக்கெட் முழு பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்படும்,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
விமானத்தில் தீப்பிடித்ததற்கான காரணங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.