சிவகாசிப் பட்டாசுகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனா

சிவகாசிப் பட்டாசுகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனா

படம்: தினத்தந்தி

14 Jun 2026 - 3:57 pm

2 mins read

சென்னை: சீனாவிற்கு நிகராக சிவகாசி பட்டாசுகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தமிழகக் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.

பொருளியலில் இரண்டாம் இடத்தில் உள்ள சிவகாசி, விருதுநகரின் தரம் வெகுவாக உயர்ந்துவிடும் என்று தென் கொரியப் பயணம் முடிந்து சென்னை திரும்பிய அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

கொரியாவில் சிவகாசி பட்டாசுகள் குறித்து விவரங்களைப் பகிர்ந்தபோது ஆச்சரியமடைந்து பட்டாசுகளை ஏற்றுமதி செய்ய அவர்களே அழைப்பு விடுத்ததாகக் குறிப்பிட்ட அமைச்சர் கீர்த்தனா, சீனர்கள் அனைத்து நாடுகளுக்கும் பட்டாசுகளை ஏற்றுமதி செய்வதாகத் தெரிவித்தார்.

“ஆனால், நாம் இவ்வளவு பெரிய திறமையை வைத்துக்கொண்டு இதுவரை ஏற்றுமதி செய்யாமல் உள்ளோம்.

“நமக்கு துறைமுக வசதி இருக்கிறது. எனவே எளிதாக ஏற்றுமதி செய்ய முடியும். இதற்கேற்ப உரிய கொள்கை உருவாக்கப்படும்,” என்றார் அமைச்சர் கீர்த்தனா.

இதனிடையே, தமிழகத் தொழில் துறையில் முதலீடு செய்ய தென் கொரியாவின் மோட்டிலிங்க் நிறுவனம் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தி உள்ளது.

அரசுமுறைப் பயணமாக தென்கொரியா சென்றிருந்த அமைச்சர் கீர்த்தனா, அந்நிறுவன அதிகாரிகளை நேரில் சந்தித்து தொழில் முதலீடு செய்ய வேண்டுகோள் விடுத்தார்.

இதுகுறித்து தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தென் கொரியாவில் ‘ஆட்டோமோட்டிவ் எலக்ட்ரானிக்ஸ்’ உற்பத்தியில் மோட்டிலிங்க் முன்னணி நிறுவனமாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

“முதல்வர் விஜய் தலைமையில் தமிழகத் தொழில்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தோம். அப்போது வாகன மின்னணுவியலின் முன்னணி உற்பத்தியாளரும் ஹூண்டாய், கியா நிறுவனங்களுக்கு முக்கியமான விநியோகிப்பாளருமாக உள்ள மோட்டிலிங்க் நிறுவனம் தமிழகத்தில் தனது உற்பத்தி ஆலையை விரிவுபடுத்துவதில் மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தியது,” என்று அமைச்சர் கீர்த்தனா தமது பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தின் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, திறமையான பணியாளர்கள், முன்னணி உலகளாவிய உற்பத்தியாளர்களைத் தொடர்ந்து ஈர்த்து, முதலீடுகளுக்கு விருப்பமான இடமாக வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தென் கொரியாவில் ஹூண்டாய் கனரகத் தொழிற்சாலையின் (ஹெவி இண்டஸ்ட்ரீஸ்) உயர் அதிகாரிகளையும் அமைச்சர் கீர்த்தனா சந்தித்துப் பேசியுள்ளார்.

அப்போது, தூத்துக்குடியில் முன்மொழியப்பட்டுள்ள கப்பல் கட்டும் தளம் குறித்து அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

குறிப்புச் சொற்கள்
சீனாசிவகாசிவிருதுநகர்தென் கொரியாதொழில்துறைமுதலீடுபட்டாசுஏற்றுமதிஅமைச்சர்