புதுடெல்லி: இந்தியாவில் வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பு சார்ந்த உடல் பருமன் பிரச்சினையால் ஆண்களைவிட பெண்களே அதிக அளவில் பாதிக்கப்படுவதாக அண்மைய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.
குறிப்பாக, 30 முதல் 49 வயதுக்குட்பட்ட 10 பெண்களில் 6 பேருக்கு இந்தப் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
‘நீரிழிவு, வளர்சிதை மாற்ற நோய்க்குறி: மருத்துவ ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள்’ என்ற அனைத்துலக இதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேசிய குடும்பச் சுகாதார கணக்கெடுப்பின்படி (2019-2021), இந்தியாவில் ஏறக்குறைய 40 விழுக்காடு பெண்களும் 12 விழுக்காடு ஆண்களும் வயிற்றுப் பருமன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
30 முதல் 49 வயதுடைய பெண்களிடையே இந்தப் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. 10 பெண்களில் ஐந்து முதல் ஆறு பேருக்கு இடுப்புச் சுற்றளவு இயல்பை விட அதிகமாக இருக்கிறது.
இப்பிரச்சினை நகர்ப்புறங்களிலும் வசதி படைத்தவர்களிடமும் மட்டுமின்றி, தற்போது கிராமப்புறங்கள், நடுத்தர வர்க்கத்தினரிடையேயும் வேகமாக அதிகரித்து வருகிறது.
வயிற்றுப் பகுதியில் அதிகப்படியான கொழுப்பு சேருவதற்கு நகர்ப்புற வாழ்க்கைமுறை, உடல் உழைப்புக் குறைவு, வருமான அதிகரிப்பால் ஏற்படும் உணவு மாற்றங்கள், அதிகப்படியான அசைவ உணவுப் பழக்கம், வயது கூடும்போது வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியன முக்கியக் காரணங்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.
உடல் பருமனை அளவிட பொதுவாகப் பயன்படுத்தப்படும் பிஎம்ஐ முறை, இந்தியர்களுக்குத் துல்லியமான முடிவைத் தருவதில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
மறைந்துள்ள ஆபத்துகள்
வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பு வெறும் அழகு சார்ந்த பிரச்சினை அல்ல; அது உயிருக்கே ஆபத்தான பல நோய்களுக்கு நுழைவு வாயிலாக அமைவதாகக் கூறப்படுகிறது.
இதய நோய்கள், வகை 2 நீரிழிவு, நாள்பட்ட சிறுநீரகப் பாதிப்பு, கல்லீரல் கொழுப்பு நோய், மார்பகப் புற்றுநோய் போன்ற சில குறிப்பிட்ட புற்றுநோய்கள்.
தோலுக்கு அடியிலும், கல்லீரல், கணையம் போன்ற முக்கிய உறுப்புகளைச் சுற்றியும் சேரும் இந்தக் கொழுப்பு, வளர்சிதை மாற்றத்தில் பெருங்குழப்பத்தை ஏற்படுத்தி இதய நலத்தைச் சிதைப்பதாக ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பதின்ம வயதினர், இளையர்கள், குறிப்பாகப் பெண்கள், ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதோடு, முறையான உடற்பயிற்சி மூலம் இடுப்புச் சுற்றளவைக் கட்டுக்குள் வைக்க வேண்டியது ஓர் ‘அவசர நிலை’யாக மாறியுள்ளதாக இந்த ஆய்வு உணர்த்துகிறது.

