சென்னை: பாஜகவுடன் கூட்டணி மட்டுமே அமைத்துள்ளோம், ஆட்சியில் பங்கு கிடையாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த வாரம் அறிவித்தார்.
இதையடுத்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், வெற்றி பெற்றால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது தொடர்பாக தற்போதைக்கு எதுவும் தெரிவிக்க முடியாது என்றார்.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை வளாகத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.
“திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற கருத்துகளுடைய கட்சிகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நாங்கள் முயற்சித்தோம்.
“அந்த முயற்சியில் முதல்கட்டமாக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.
“இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், எங்கள் கூட்டணியில் பல கட்சிகள் சேரும். நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். எதிர்க்கட்சிகளுக்கு ஏன் எரிச்சல்,” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
“டெல்லிக்கு பிரதமர் நரேந்திர மோடி என்றும் தமிழகத்துக்கு எடப்பாடி பழனிசாமி என்றும்தான் அமித் ஷா கூறியிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
“அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சியை அமைக்கும் என்றுதான் தெரிவிக்கப்பட்டது. அரசு அதிகாரத்தில் பங்கு பற்றி அமித் ஷா தெரிவிக்கவில்லை,” என்று பழனிசாமி மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையே அதிமுக தலைமையில் மெகா கூட்டணி உருவாகி வருகிறது.
அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதால் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் சேர உள்ளன.
ஏற்கெனவே பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருந்த டி.டி.வி. தினகரன் ஓ. பன்னீர்செல்வம், டாக்டர் கிருஷ்ணசாமி, ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், ஜான் பாண்டியன் ஆகியோரும் இந்தக் கூட்டணியிலேயே தொடர உள்ளனர்.
இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மெகா கூட்டணி உருவாகி வருகிறது.