தமிழக அரசைக் கவிழ்க்க ‘மேகாலயா திட்டம்’: 14 பேர் கைது

தமிழக அரசைக் கவிழ்க்க ‘மேகாலயா திட்டம்’: 14 பேர் கைது

2 mins read
7ad429f0-c218-457a-947c-fa20fa11c99a
ரூ.4.5 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மூன்று பேரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழக அரசைக் கவிழ்க்க ‘மேகாலயா திட்டம்’ என்ற பெயரில் சதி நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டின்பேரில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தமிழகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் ரூ.4.5 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மூன்று பேரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

சட்டமன்ற வாக்கெடுப்பில் தவெக அரசின் நிலைப்பாடுக்கு மாறாக வாக்களிக்க தம்மிடம் சிலர் ரூ.35 கோடி லஞ்சம் தர பேரம் பேசியதாகக் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜா காவல்துறையில் புகார் அளித்தார்.

லஞ்சம் பெற மறுத்ததால் தமக்கும் தம் குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியதையடுத்து சென்னை காவல்துறையினர் யூடியூபர் திருநாவுக்கரசு உள்ளிட்ட சிலரைக் கைது செய்தனர்.

இதையடுத்து நடைபெற்ற தீவிர விசாரணையின்போது ‘மேகாலயா திட்டம்’ என்ற பெயரில் 15 தவெக எம்எல்ஏக்களைப் பெரும் தொகை கொடுத்து விலைக்கு வாங்க ஒரு தரப்பினர் திட்டமிட்டு இருந்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன் மூலம் தமிழகத்தில், தவெக ஆட்சியின் நிலைத்தன்மையைச் சீர்குலைக்க திட்டமிடப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்ததையடுத்து யூடியூபர் திருநாவுக்கரசு, நரேஷ் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர்.

இருவரும் இவ்வழக்கில் முன்பிணை பெற்றுள்ள நிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர் ஒருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

கடந்த 17ஆம் தேதி சென்னை சூளைமேட்டிலுள்ள தீபம் நிதி நிறுவனத்தில் சோதனை நடத்தி ரூ.2.82 கோடி ரொக்கப் பணத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த ரங்கராஜன் உள்ளிட்ட மூன்று பேரிடம் ரூ.56 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மூவரும் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மூவரும் மதுரையில் உள்ள நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும் சென்னையில் உள்ள நிதி நிறுவனத்துடன் அவர்கள் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் இதுவரை மொத்தம் ரூ.4.5 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் அது ஹவாலா பணமா என விசாரணை நடந்து வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் மேலும் சில முக்கியப் புள்ளிகள் சிக்க வாய்ப்பு உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்