சென்னை: போரூர் - வடபழனி மெட்ரோ ரயில் வழித்தடத்தில் ஜனவரி 9ஆம் தேதி காலை சோதனையோட்டம் நடைபெற்றது.
ரயில் என்ஜின் சோதனை ஏற்கெனவே நடத்தப்பட்டு ரயில் பாதைக்கான உறுதிச் சான்றும் அவ்வழித்தடத்திற்கு வழங்கப்பட்டது.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியின் ஒரு பகுதியாகப் பூந்தமல்லி முதல் சென்னைக் கலங்கரை விளக்கம்வரை புதிய மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படுகிறது.
விரைவில் இந்தப் பகுதியில் மெட்ரோ ரயில் இயக்கம் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில், போரூர்–வடபழனி இடையேயான கட்டுமானப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த வழித்தடத்தை விரைவாக முடித்துப் பொதுப் பயன்பாட்டிற்கு வழங்கச் சென்னை மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கிட்டத்தட்ட 9.5 கி, மீ., கொண்ட பூந்தமல்லி–போரூர் ரயில் பாதை டிசம்பரில் திறக்க அந்நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ரயில்வே வடிவமைப்பு, தரநிலையமைப்பு ஆகியவற்றிலிருந்து வேகச் சான்றிதழ் கிடைக்காததால் தாமதம் ஏற்பட்டது.
தற்போது தற்காலிகச் சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், அந்தப் பாதையில் 99 விழுக்காட்டுப் பணிகள் முடிவடைந்துள்ளன.

