கனிம நில வரிவிதிப்பு மசோதா நிறைவேற்றம்

2 mins read
700109b0-b1d3-47a2-bfa5-117b4dd6fbca
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் கனிம வளங்களுடன் உள்ள நிலங்களுக்கு நிலவரி விதிப்பது தொடர்பான சட்ட முன்வரைவை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிமுகம் செய்தார்.

அதில், கனிமப் பகுதி மேம்பாட்டு ஆணையம் தொடர்பான வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், கனிம வளம் மற்றும் சுரங்கங்களைக் கொண்டுள்ள நிலங்களுக்கு வரி விதிப்பதற்கான சட்டத்தை இயற்ற மாநில சட்டப் பேரவைக்கு அதிகாரம் உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சட்டப்படி, பழுப்புக்கரி, சுண்ணாம்புக்கல், சுண்ணாம்புக்களி, மாக்னசைட், காரீயம் உள்ளிட்ட 13 வகை கனிமங்களைப் பெரிய வகை கனிமங்களாகவும் கரட்டுக்கல், சரளை அல்லது மண், வண்ண மற்றும் கறுப்புக் கருங்கல், கூழாங்கற்கள், மணல், படிகக் கல், தீக்களிமண், உருட்டுக் களிமண், களிமண், ஆற்று மணல், நொறுங்கிய கல், சுண்ணப்பாறை உள்ளிட்ட 17 கனிமங்கள் சிறிய வகை கனிமங்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

பெரிய கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.7 ஆயிரம் வரை வரி நிர்ணயிக்கப்படுகிறது. காரீயத்துக்கு ரூ.40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறு கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.420 வரை வரி நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த சட்ட முன்வரைவு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் அதிமுக, பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தவேக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். “சிறிய கனிமங்களைக் கொண்ட நிலங்களுக்கு வரி விதித்தால் கட்டுமானப் பொருள்கள் விலை உயரும். இதனால், பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, இந்தச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,” என்று வலியுறுத்தியுள்ளனர்.

அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, ‘‘ராயல்டி என்பது வரியல்ல என்றும் வரியைப் பெறுவதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. விற்பனை வரியில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. எனினும், உறுப்பினர்களின் கருத்துகள் தொடர்பாக வரிவிதிப்பின்போது பரிசீலிக்கப்படும்,’’ என்றார். தொடர்ந்து, உறுப்பினர்களின் குரல் வாக்கெடுப்பு மூலம் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

குறிப்புச் சொற்கள்