கரூர்: கூட்ட நெரிசலில் சிக்கி மாண்டோரின் உடல்கள் கரூர் அரசு மருத்துவமனையில் வரிசையாகக் கிடத்தப்பட்டிருந்தன.
அக்காட்சியைக் கண்டு இறந்தவர்களின் உறவினர்களும் பொதுமக்களும் கண்ணீர் விட்டுக் கதறிய காட்சி பார்ப்பவர்களின் மனத்தை உலுக்கியது.
அச்சமயம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் திமுக பிரமுகர்களும் அங்கு வந்துசேர்ந்தனர்.
முன்னதாக, அங்கு வந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், நெரிசலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் உயிரிழந்தோரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியபோது, அவர் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டுக் கதறினார்.
அப்போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அங்கு வந்தபோது அவரைப் பார்த்து, “படித்துப் படித்துச் சொன்னேன், அனைத்து விதிமுறைகளையும் சரியாகப் பின்பற்றுங்கள் என்று பலமுறை கூறினேனே. இங்கே கிடத்தப்பட்டவர்களைப் பாருங்கள். என்னால் தாங்க முடியவில்லை,” என்று கண்ணீர் மல்க கூறினார்.
அதைக் கேட்டு, செந்தில் பாலாஜியும் கண்கலங்கினார். செந்தில் பாலாஜியை அணைத்தபடி கதறிய அன்பில் மகேசுக்கு அவர் ஆறுதல் கூறினார்.
அமைச்சர் அன்பில் மகேஸ் கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் அடங்கிய காணொளி இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டன.