உதகை: நீலகிரி மாவட்டம் முதுமலைப் புலிகள் காப்பகத்தின் தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, புலியைத் துரத்திச் சென்று காணொளியைப் பதிவுசெய்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசுவின் செயல் புது விவாதங்களை எழுப்பியுள்ளது.
கடந்த 10ஆம் தேதி நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் அரசு ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட அமைச்சர் வன்னியரசு, அதனைத் தொடர்ந்து முதுமலைப் புலிகள் காப்பகத்திற்குச் சென்றார்.
அங்கு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அடர்ந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அவர் நடந்து சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த புலி ஒன்றை விரட்டிச் செல்வது போன்ற காட்சிகளைக் காணொளியாகப் பதிவுசெய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.
அதையடுத்து, அமைச்சரின் செயலுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
சாமானிய மக்கள் வனப்பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்தால் உடனடியாக வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கும் வனத்துறையினர், ஓர் அமைச்சரைப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் நடந்து செல்லவும் வனவிலங்கை அச்சுறுத்தும் வகையில் புலியை விரட்டவும் எவ்வாறு அனுமதித்தனர் என இயற்கை ஆர்வலர்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டங்களை மதிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள அமைச்சரே விதிகளை மீறியிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், இதற்கு உடந்தையாக இருந்த வனத்துறை அதிகாரிகள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சூழலியல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
