துணை முதல்வராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நியமனம்

துணை முதல்வராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நியமனம்

1 mins read
0e855d6a-b9f0-42fa-b364-8de4e489d77c
(இடமிருந்து) திமுக பவள விழாவில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின், முதல்வர் மு..க.ஸ்டாலின், அமைச்சர் அன்பரசன். - படம்: இந்து தமிழ் ஊடகம்

சென்னை: தமிழ்நாட்டின் துணை முதல்வராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மூன்று பேர் நீக்கப்பட்டு, நான்கு பேர் இணைக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

உதயநிதி உள்ளிட்டோர் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) பிற்பகல் பதவியேற்கவுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

முன்னதாக, அமைச்சரவை மாற்றத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த 26ஆம் தேதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அவர் மீண்டும் அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளார். அவருக்கான துறை பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டது.

மேலும், கோவி.செழியன், சா.மு.நாசர், பனைமரத்துப்பட்டி ஆர்.ராஜேந்திரன் ஆகியோரும் தமிழக அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஒதுக்கப்படும் துறைகள் குறித்தும் தெளிவான தகவல் இல்லை.

இதுவரை இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த திரு.உதயநிதி ஸ்டாலினுக்குத் தற்போது கூடுதலாக, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை ஆகியவை அளிக்கப்பட்டுள்ளன.

இதுவரை, பால்வளத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஐந்தாவது முறையாக அமைச்சரவையை மாற்றி அமைப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஆளுநர் மாளிகையில் அமைச்சர்களின் பதவியேற்பு விழா, பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்